கண்ணை மயக்கும் மீன் செவுள் அபாயம்!
கண்ணை மயக்கும் மீன் செவுள் அபாயம்!
திரைகடல் ஓடி நறுமணத் திரவியங்களைக் கொணர்ந்திங்கு சேர்ப்பதற்குப் பதிலாக, கற்கக் கூடாததையெல்லாம் விரும்பிக் கற்றுத் தேர்ந்து ஒருசாரரின் வாழ்வில் இருளை உமிழும் வணிகக் காலமிது. மீனில் பார்மாலின் கலப்படம் என்கிற செய்தி விந்தையாகக் கருதக் கூடியதுமல்ல. காலம் முழுக்க எதிலாவது எதையாவது தமிழ் வணிகம் அறத்தை மீறிக் கலக்கத் துவங்கி வெகுகாலமாகி விட்டது.
அபாயம் மேலெழுந்து வருகையில் மட்டும் அதுகுறித்த சீற்றங்கள் கடலைக் காட்டிலும் பொங்கி எழும். அப்புறம் மெல்ல ’பச்சைப் புள்ளை’ கடல் மாதிரி அலையில்லாமல் அடங்கிப் போய்விடும். சிக்கன் எமன் என ஒரு பேரரக்கன் வந்து ஒரு துறையையே புரட்டிப் போட்ட செய்திகளெல்லாம் இப்போது நினைவில்கூட தங்கியிருக்காது.
இதைப் போல உடலுக்கு ஊறு விளைவிக்கும் ஒருநூறு உணவுக் கலப்படச் செய்திகள் இதற்கு முன்னர் தோன்றிய வேகத்தில் மறைந்தும் போயிருக்கின்றன. எப்போதுமே அரசும் இவற்றைக் கண்காணிக்க வேண்டிய அதன் துணை அமைப்புகளும் மிகை வேகத்தில் அப்படியான செய்திகளை மறைக்கத்தான் போராடுகின்றனவே தவிர, அதைத் தகுதி நீக்கம் செய்ய முழு மூச்சாக முயல்வதில்லை.
கோவோ உள்ளிட்ட சில மாநில அரசுகள் முதலில் இல்லவே இல்லை எனச் சாதித்தன. பிறகு பெரிய மனது வைத்து அனுமதிக்கப்பட்ட அளவு என்றனர். ஒரு சிட்டிகை என்றாலும் விஷத்தின் தன்மை மாறாதே? நுகர்வோர்கள்தான் கடவுள் என்றார் காந்தி. உண்மையில் இந்த வணிகச் சக்கரத்தின் அச்சை உயிரை உருக்கி உருட்டிக் கொண்டு போகிறவர்கள் நுகர்வோர்களே. அவர்கள் கோணத்தில் எந்த ஒரு அரசும் யோசிக்கத் துணிவதில்லை. மீனில் பார்மாலின் என்கிற விவகாரத்திலும் அதுதான் நடக்கிறது.
பல கலப்பட உந்துதல்களுக்கு நதிமூலமாக இருப்பதைப் போல, சீனாவே இந்த விவகாரத்திற்கும் மூலம். கடல் நண்டில் பார்மாலினை ஊசி வழியாக ஏற்றி அசம்பாவிதமொன்றை உலகிற்குக் கற்றுக் கொடுத்தார்கள். வரைபடத்தில் இருக்கிற பிறநாடுகளின் நரம்பிலும் ஏறி விட்டது அவ்விஷம். திறந்த மனதோடு இந்த விவகாரத்தை அணுகுவதன் வழியாகவே வணிகத்தின் அடிவேராய் இருக்கும் நுகர்வோர்களுக்கு நியாயம் செய்ய இயலும்.
மீன் வளத் துறை சார்ந்த அமைப்பொன்று எடுத்த அதிகாரப்பூர்வமற்ற புள்ளி விபரப்படி, சென்னையைச் சுற்றியிருக்கிற இடங்களில் மட்டும் ஒரு நாளைக்கு எண்பதாயிரம் டன் கடல் மீன்கள் அழிக்கப்படுகின்றன. நாட்டில் நிறையத் தலைநகரங்கள் இருந்தாலும், மீன் உணவுப் பிரியர்கள் என்று வருகையில் சென்னையே முதலிடத்தில் இருக்கிறது.
உண்மையில் தமிழகத்தில் உள்ள கடற்கரையோர மீன்களால் சென்னைத் தேவையைப் பூர்த்தி செய்யவே இயலாது. கடற்புறம் சார்ந்த 13 மாவட்டங்களின் தேவையை அங்குள்ள மீன்களே பூர்த்தி செய்து விடுகின்றன. அவர்களின் தேவை போக திரளும் மிகை மீன்கள் எல்லாமும் சென்னைக்கே நீந்தி வருகின்றன.
சென்னையைத் தவிர பிற நகரங்களில் மீன் உணவுப் பழக்கம் என்பது குறைவே. உள் மாவட்டங்கள் பலவற்றில் இன்னமும் கடல் மீன்கள் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. நன்னீர் மீன்களே அங்குள்ளவர்களை இன்னமும் எட்டுகின்றன. இப்படித் தமிழகம் முழுக்கப் பிடிபடும் மீன்கள் எல்லாமும் முறையாகக் குளிர்ப்பதனமூட்டி சென்னையை எட்டுகின்றன.
இவை விரைவாக சென்னையை எட்டுவதற்குத் தமிழகத்தில் தரமான போக்குவரத்து வசதிகள் இருக்கின்றன என்பதால் பிரச்சினையில்லை. கடும் போட்டியிருக்கிற ஏலத்தில் படகில் இருந்து இறங்கிய அரை மணி நேரத்தில் அத்தனையும் விற்றுத் தீர்ந்து விடும் என்பதால், பார்மாலின் கலக்க வேண்டிய அவசியமும் இல்லை.
உள்ளூர்த் தேவை தாண்டி, பிற மாநில ஏற்றுமதி என்று வருகையிலேயே தட்டுப்பாடு என்பது தலைதூக்குகிறது. வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் மீன்களில் கலப்படம் செய்து கண்டுபிடிக்கப்பட்டால், நடுக் கடலிலேயே கண்டெயினர்களை அப்படியே திருப்பியனுப்பி விடுவார்கள். முதலுக்கே மோசம் என்பதைப் புரியாதவர்களா அவர்கள்?
எதை வேண்டுமானாலும் கொண்டு வந்து கொட்டுகிற குப்பைத் தொட்டியாக இந்தியச் சந்தை மாறி வெகு நாளாகி விட்டதே? இங்கே வந்து கொட்டுபவைளிலேயே பார்மாலின் கலக்கப்படுகிறது. ஆந்திரா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் உள்ள கடற்கரைகளில் அதிகாலை நேரங்களில் தமிழ்ச் சந்தை சார்ந்தோர், அமர்ந்து தேநீர் அருந்துகிற காட்சிகள் சாதாரணமானவை.
மேற்கண்ட மாநிலங்களில் கடல் மீன் உணவுப் பழக்கம் என்பது அரிதானது. உதாரணமாக மேற்கு வங்கத்தை எடுத்துக் கொண்டால், நன்னீர் மீனான ஹில்சாவிற்கு கொடுக்கும் இடத்தை வஞ்சிர மீனிற்குத் தரவே மாட்டார்கள். ஒடிசா பகுதியில் அங்குள்ள பூர்வநிலத்தார் வாங்குகிற வகையில், உள்நாட்டு ஏற்றுமதி காரணமாக மீனின் விலை இருக்காது.
அங்கிருந்து கொண்டு வரப்பட்டு இங்கே கடைவிரிக்கப்படும் மீன்களில் பார்மாலின் கலந்திருப்பதற்கு குறைவான சாத்தியக்கூறுகள் உண்டு. “என் வீட்டிற்குக் கொண்டு வரும் கூடை மீனில் கலந்திருப்பதற்கு சாத்தியம் உண்டா?” என்று கேட்டால், நேர்மையாக பதில் சொல்ல வேண்டுமெனில், கூடைக்காரருக்கோ, விற்கும் கடைக்காரருக்கோகூடத் தெரியாமல் கலந்திருக்கச் சாத்தியமுண்டு.
மீனவர்கள் நேரடியான விற்பனையில் ஈடுபடுவதில்லை. ஆந்திராவில் இருந்து வரும் சரக்கும், ராமேஸ்வரத்தில் இருந்து வரும் சரக்கும் ஒரே மாதிரியான வியாபாரிகளிடமே குவிந்து ஒன்றரக் கலக்கிறது. அதில் எது கலப்படமில்லாதது என்பதை எப்படி அறிவது? இந்தயிடத்தில்தான் அரசைப் பொறுப்பாக்க வேண்டியிருக்கிறது. எளிதில் கண்காணிக்கிற வாய்ப்பிருக்கிற, சென்னையில் குவிந்திருக்கும் பெரியளவிலான மொத்த விற்பனை மையங்களில் இருந்தே உள்ளூர், வெளி மாநிலங்கள் என எல்லா இடங்களுக்கும் பிரித்து அனுப்பப்படுகின்றன. இங்கு வந்துவிட்டால் மீனவர்களுக்கும் மீன்களும் சம்பந்தமே கிடையாது.
இல்லவே இல்லை என அரசு மல்லுக்கட்டுவதற்குப் பதிலாக இந்த மையங்களில் கிடுக்கிப்பிடி போட்டாலே இந்த விவகாரத்தை உடனடியாகவே கட்டுக்குள் கொண்டு வந்துவிட முடியும். தலைக்கு இவ்வளவு கொடுத்துவிடுங்களென இந்த விவகாரத்தையும் பணம் குவிப்பதற்கான வாய்ப்பாக அரசு அமைப்புகள் கருதுமானால், உண்மையில் விமோசனமில்லை.
அரசு யாருக்காகவும் தடம் மாறாமல் இந்த விவகாரத்திலும் நுகர்வோர் நலன் சார்ந்தே செயல்பட விழைய வேண்டும். இப்போது எடுத்த மாதிரிகளைக்கூட ஒரு தனியார் பத்திரிகை நிறுவனமே எடுத்து விவகாரத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறதே தவிர, அரசல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுளான நுகர்வோர்களுக்குமே இதில் கற்றுக் கொள்ளப் பாடங்கள் இருக்கின்றன. கடற்கரையில் மணல் தடவிப் படுத்துக் கிடக்கும் மீன்களெல்லாம் அன்றைக்கு அதே கடலில் பிடித்த மீன்கள் இல்லை. செவுள் சிவப்பாய் இருந்தால் தரமானது என எந்த முத்திரையும் குத்தி விட முடியாது. கண்களை மயக்கி விடும் அது. பாதிக்குப் பாதி விலை குறைவாக இருக்கிறது என்பதற்காக ஓடிப் போய்க் கையிலேந்தி விஷத்தைக் குடிக்க முடியாது. பேரம் பேசுவதில் காட்டுகிற அக்கறையை தரம் சார்ந்தும் காட்ட முயலலாம் தப்பில்லை.
இன்னொரு கோணம் மிக முக்கியமானது. மாம்பழத்தில் கார்பைடு கல் வைப்பதாலேயே அதைச் சாப்பிடும் பழக்கம் அருகி வருகிறது. மீன்கள் விவகாரத்திலும் எதிர்காலத்தில் இப்படியான நிலை வரக்கூடச் செய்யலாம். விளைவிப்பவரோ, கடலுக்குள் உயிரைப் பணயம் வைத்துப் போய் மீனைக் கரைக்குக் கொண்டு வருகிறவரோ இதுபோன்ற கலப்படங்களில் ஈடுபடுவதில்லை.
சிக்கலில்லாத காலங்களில் ஆயிரம் ரூபாய்க்கு விற்றாலும் உற்பத்தியாளர்களுக்குக் கிடப்பதென்னவோ குறைவான சதவீதமே. விற்பவர் ஒருபொருள் துவண்டால் இன்னொரு பொருளுக்கு விரைவில் மாறி விடுவார். ஆனால் அதிக லாபம் கருதி எவரோ செய்யும் பாவங்களுக்காக செய்கிற தொழிலை விட்டு வெளியேற இயலாத இவர்களே எப்போதும் செய்யாத தவறிற்காகச் சிலுவை சுமக்கிறார்கள்!
நன்றி :இந்து தமிழ் திசை.