கேரை மீன். ஏன்? எப்படி? எதனால்? - FishinSeaFood
கேரை மீன். ஏன்? எப்படி? எதனால்?

கேரை மீன். ஏன்? எப்படி? எதனால்?

கேரை மீன். ஏன்? எப்படி? எதனால்?

மருந்துகள் அதன் விளைவுகள் பற்றியெல்லாம் தொடர்ச்சியாகப் பின்பற்றி வரும் நண்பர் ஒருத்தர் திடீரென அழைத்து, “நீங்க கட்டாயம் விட்டமின் டி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அது ஓரளவு கொரானா பரவலுக்கு எதிராகச் செயல்படுகிறது என்று சொல்கிறார்கள்” என்றார்.

“ஏங்க தினமும் சூரியன் எழறதே என் வெற்று உடம்பில சுள்ளுன்னு அடிக்கத்தான். நாள் முழுக்க என் மேல பட்டு கருவாடாக்காம விடாது. ஊரே வந்து குத்தவச்சு அள்ளிட்டுப் போற மாதிரி விட்டமின் டி இந்நேரம் என் உடம்பில குவிஞ்சிருக்கும்” என்றேன் சிரித்துக் கொண்டே.

தொலைபேசியை அணைத்த பிறகு, சூரிய ஒளியைத்தாண்டி என்னென்ன உணவுப் பொருட்களில் எல்லாம் விட்டமின் டி இருக்கும் என யோசித்தேன். சட்டென எனக்கு கேரை மீன்தான் நினைவிற்கு வந்தது. அதற்காக சைவ உணவுப் பழக்கம் கொண்டோர், நாங்கள் என்ன தக்காளித் தொக்கா என்பீர்கள்.

எனக்குத் தெரிந்து சோயா, காளான் உள்ளிட்டவைகளிலும் விட்டமின் டி இருக்கிறது. ஆனால் லாஜிக்காக ஒரு கேள்வி கேட்கிறேன். சோயாவையும் காளானையும் எதையாவது தெளித்து வளர்த்துவிட முடியும். ஆனால் கேரை மீனை வளர்க்க முடியுமா, சொல்லுங்கள். அதனால்தான் இது அசைவ விவரிப்பாகவும் ஆகி விட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள். இதன் மகத்துவத்தைக் கேட்டு விட்டு, ஆதரவாளராக மாறினாலும் எதற்கு எப்படியோ, ஆனால் உடலிற்கு நல்லது.

கேரை மீனைப் பற்றி யோசிக்கத் துவங்கியவுடன் உடனே சாப்பிட வேண்டும் எனத் தோன்றியது. பழனி மீன் சந்தையில் கிடைக்காது என்பது தெரிந்தும் சும்மா தேடிப் போனேன். டேபிள் முழுக்க அணை மீன்கள் மட்டுமே கொட்டிக் கிடந்தன. அதிகம் போனால் அவை தம்வாழ்வில் ஐம்பதடி ஆழம் பார்த்திருக்குமா?

நம்ம ஆள் கேரை ஆழ்கடலில் மட்டுமே வாசம் புரிபவை. ஏணி வைத்தாலும் எட்டுமா? “என்னண்ணே தேடறீங்க. என்னது கேரையா. அதாண்ணே இது” என சப்பையாய்க் கிடந்த மீனொன்றைத் தொட்டுக் காட்டினார். அதன் பெயரைக் கூட எனக்குக் கேட்கப் பிடிக்கவில்லை. குழம்பு வைத்தால் கொழகொழவென்று மண்வாடையோடு இருக்கும்.

கண்மாய்க் கெளுத்தியின் மண்வாசனையைப் போல அல்ல அது.

கெளுத்தியை எல்லாம் அதனோடு ஒப்புமைப் படுத்துகிற என் நாக்கில் தீயைத்தான் கொளுத்த வேண்டும். அந்த வளர்ப்புப் பிராணி தொந்தரவு படுத்துகிற மண்வாசத்தை மட்டுமல்லாமல் நாக்கு நுனியில் கசப்பான ருசியையும் தருவதைக் கவனித்தேன். அதன் பிறகு அதை வாங்குவதை நிறுத்திக் கொண்டேன்.

அந்த மீனை போன வாரம் போன போது, வாவ்வால் என்றார் அதே கடைக்காரர். எனக்கு மீன் பற்றி ஒன்றுமே தெரியாது என்பது அவரது நம்பிக்கை. அதைக் கெடுக்காமல் நானும் நடித்துக் கொள்வேன். ஒருதடவை சென்னை ஒயின் ஸாப்புகளில் விற்கப்படும் தும்பிலி மீனைக் காட்டி, கிழங்கான் மீன் என்றார். அது சென்னையில் சீப்பட்டு கிடக்கும். பாம்பைப் போல தடித்துக் கருத்திருக்கும்.

இதைப் போய் எப்படி மஞ்சள் கிழங்கானுடனும் தொண்டி ஸ்பெஷல் அயிட்டம் வெள்ளைக் கிழங்கானுடனும் ஒப்பிட்டார்? என வருத்தமாக இருந்தது. எனக்கு இந்த வளர்ப்பு வகைகள் என்றாலே ஆகாது. ஆனால் வேறு வழி இல்லாததால் கட்லாவை மட்டும் ஒத்துக் கொண்டு விட்டேன்.

அதிலும் பொள்ளாச்சி சுங்கத்தில் இருக்கிற அந்த மீன் கடையில் கட்லா சாப்பிட்ட பிறகே கூடுதலாகப் பிடித்து விட்டது. ஒருமுறை போய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். நானே உண்மையில் கொடுவா என்று நினைத்து விட்டேன். அதிக முட்கள் நிறைந்த கட்லாவை வெட்டுவதில் இருக்கிறது சேதி. அந்த உணவகத்தில் நிறைவாகச் செய்திருந்தார்கள்.

அந்த வகையில் கட்லா மட்டுமே எனக்கு கைகொடுத்துக் கொண்டிருக்கிறது.

அதை வாங்கிக் கொண்டு வந்து கேரையின் ஏக்கத்தைத் தணித்தேன். சிறுவயதில் தேனி வைகைப் பாசனத்தில் இருந்தவன். ரியல் ஜிலேபி கெண்டையைத் தூண்டில் போட்டுச் சுட்டும் குழம்பு வைத்தும் தின்றவன். என்னிடம் வந்து உடல் முழுக்க வெண் புள்ளிகள் கொண்ட திலேப்பியா மீனைக் காட்டி அசல் கெண்டைண்ணே என்று சொன்னால் எப்படி இருக்கும்? கேரளாக்காரர்களிடம் இதைக் காட்டி, கறீமீன் என்பார்கள்.

நம்மைவிட கடலுணவில் அவர்கள் கில்லி என்பதால் முகத்தில் துப்பப் போய் விடுவார்கள். “ஏம்ப்பா தகடு. காயல் என்னும் முகத் துவாரத்தில் வளர்கிற கறீ மீனும் இதுவும் ஒண்ணா” எனச் சேட்டன்கள் குமுறி விடுவார்கள். பிறகு, இலையில் மடித்து வேக வைத்து, பொழிச்சது என்று சொல்லித் தின்று கொண்டிருக்கிறார்கள் இல்லையா?

எதற்காக இதையெல்லாம் சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டி இருக்கிறது என்றால், கடல் இல்லாத உள் மற்றும் மேற்கு மாவட்டத்துக்காரர்கள் பாவம்.

இந்த அண்ணன்கள் சொல்கிற கெண்டைகளையும் வாவ்வல்களையும் மட்டுமே தின்றாக வேண்டியிருக்கிறது. பழனியில் விரால் மீன்கூட கிடைப்பதில்லை. இந்த லட்சணத்தில் அயிரை மீனை எங்கே போய்த் தேட? கடல்புறம் தவிர்த்த மாவட்டக்காரர்களின் மீன் உணவுப் பழக்கம் இப்படித்தான் இருக்கிறது. அவர்களும் என்ன செய்வார்கள்? வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறார்கள்?

தவிர 180 ரூபாய்க்கு அதுதான் கிடைக்கும். கடல் மீன் விலையைக் கேட்டால் தலை சுற்றி விழுந்து விடுவார்கள். இன்றைய தேதியில், அதுவும் புரட்டாசியிலேயே, வஞ்சிர மீனின் விலை கிலோ ஆயிரத்து நூறு ரூபாய். புரட்டாசி முடியட்டும், இரண்டாயிரத்தைத் தொடுகிறதா? இல்லையா பாருங்கள்?

ஆனால் பாருங்கள், நான் சொல்லப் போகிற கேரையின் இன்றைய விலை கிலோ முந்நூற்று சொச்சம்தான். என் இத்தனை ஆண்டு கால மீன் பழக்கத்தில், முதன்மையானது என்று சொன்னால் இதைத்தான் சொல்வேன். கேரள மக்கள் இதை ஏழைகளின் வஞ்சிரம் என்பார்கள். அங்குள்ள ஒயின் ஷாப்புகளில் போய்ச் சாப்பிட்டுப் பாருங்கள். கேரள கள்ளுக்கடைகளிலும் பிரசித்தம்.

எந்த மீனைச் சாப்பிடுவது என்று கேரளாக்காரர்களிடம்தான் தமிழர்கள் பாடம் படிக்க வேண்டும். இங்கிருந்து கோழித் தீவனங்களுக்கு அனுப்பப்படும் மத்தி மீன் கேரளர்களின் விருப்ப உணவு. விலை கிலோ ஐம்பது ரூபாய்க்கும் கீழ். கடைகளில் நூறு ரூபாய் சொல்வார்கள். தமிழக மக்கள் இதன் பக்கம் அண்டவே மாட்டார்கள். அதனைப் போலத்தான் கேரை மீனும்.

மற்ற மீன்களைக் காட்டிலும் இரண்டில்தான் அதிகமான விட்டமின் டி சத்து இருக்கிறது. அது சேட்டன்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மத்தி குழம்பு வைத்துப் பாருங்கள். கிட்டத்தட்ட கெளுத்தி சாப்பிட்ட உணர்வைக் கொண்டு வந்து விடலாம். கேரை மீனின் சிறிய வடிவங்களைச் சூரை மீன் என்பார்கள். கானாங் கெழுத்தி அல்லது அயிலா குடும்பத்தில் பதினைந்து வகையான மீன்கள் இருக்கின்றன. இதில் வரிச் சூரையை வைத்துச் செய்யப்படுவதுதான் மாசிக் கருவாடு. இதனைப் பற்றித் தனிக்கட்டுரையே எழுதியிருக்கிறேன். ரத்தச் சூரை, எலிச் சூரை, முண்டக் கண் சூரை என இதில் பல வகைகள் இருக்கின்றன.

வழக்கமாக ஒரு கிலோவில் இருந்து ஐம்பது கிலோ வரை வளரக் கூடியது. அளவில் பெரியவற்றை கேரை எனச் சில இடங்களில் சொல்கிறார்கள். இதில் yellofin tuna எனப்படுகிற மஞ்சள் துடுப்புச் சூரைக்கு உலக அளவில் மதிப்பு அதிகம். இவை வெப்ப மண்டல கடல் பகுதிகளின் ஆழ்கடலில் மட்டும் கிடைக்கக் கூடியது.

இதற்கு இணையாக வேறு வகை கடல்களில் கிடைக்கிற bluefin tuna என்ற ஊதா துடுப்பு கேரையும் உண்டு. டோக்கியா மீன் மார்கெட்டில் நானூறு கிலோ எடையுள்ள ஊதா துடுப்பு இரண்டு கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.  நம்முடைய மஞ்சள் துடுப்பிற்கும் அதேயளவு மவுசு உண்டு ஜப்பானில்.

ஜப்பானின் புகழ்பெற்ற, பாரம்பரிய சுஷி உணவு இதன் இறைச்சித் துண்டுகளை வைத்துத்தான் உருவாக்கப்படுகிறது. டி.டி.கே.சாலையில் உள்ள ஜப்பானிய உணவகத்திற்கு கொஞ்ச நாள் மீன் சப்ளை செய்தேன். தூக்க முடியாமல் அறுபது கிலோ ட்யூனா என்றழைக்கப்படுகிற கேரை மீனை நானும் தம்பி ஒருத்தனும் சேர்ந்து மாடிப்படிகளில் உருட்டிக் கொண்டு போனோம்.

அவ்வுணவகத்தின் செஃப் என்னை பலதடவை சுஷி சாப்பிடச் சொல்லி வலியுறுத்தியிருக்கிறார் ஒடுங்கிய கண்களைப் பணிவாகக் காட்டி. மீனின் பச்சை இறைச்சியை ஏனோ நாக்கு ஒத்துக் கொள்ளவில்லை.

ஆனால் ஜப்பானியர்களைப் பொருத்தவரை இவ்வுணவு பிரசாதத்திற்குச் சமம்.

உலகம் முழுக்கப் பிடித்துக் கொண்டு போய் டோக்கியோவில் கொட்டினாலும் ஒரே வாரத்தில் அத்தனையையும் தின்று தீர்த்து விடுவார்கள். அதனால்தான் கேரை மீன் இங்கிருந்து அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்திய அரசு கேரை மீன் பிடிப்பை ஊக்குவிக்கிறது. அதற்கென உருவான விசைப்படகுகளை வாங்குவதற்கு மானியம் கூடத் தருகிறார்கள் என்று படித்தேன்.

நம்முடைய கடலிலேயே நூற்றம்பைது கிலோ சைஸில் பிடிபட்டதை எல்லாம் பார்த்திருக்கிறேன்.

குறுக்காக அப்படியே வயிற்றை மட்டும் கிழித்து, குடல் பகுதிகளை மட்டும் நீக்கி விட்டு பேக்கிங் செய்து அனுப்புவார்கள். உள்ளே நுழைந்து ஒரு ஆள் படுத்துக் கொள்கிற மாதிரி வயிற்றைப் பிளந்தபடி கிடக்கும். அத்தனையும் ஏற்றுமதி ரகம். கொள்ளக் காசு கிடைக்கும் அந்த சைஸிற்கு.

கேரளக்காரர்களுக்கு, ஜப்பான்காரர்களுக்கெல்லாம் அதன் அருமை தெரிகிறது. ஆனால் நம்முடைய காலுக்கடியில் சல்லிசான விலையில் கிடக்கும் அதன் மீது மதிப்போ ஈர்ப்போ கிடையாது நமக்கு. எந்த விஷயத்தில்தான் தகுதியானதை மதித்திருக்கிறோம் என்று சொல்லுங்கள்.

கடை திறந்த புதிதில், பிள்ளைகளுக்கு மீன் வாடையே பிடிப்பதில்லை எனச் சொல்லித் தாய்மார்கள் வந்து நிற்பார்கள். அவர்களுக்கு நான் ரத்தச் சூறை மீனைப் பரிந்துரைப்பேன். தோள், முள் நீக்கித் துண்டுகளாய் போட்டுவிட்டால், சிவப்பிறைச்சியைப் போலவே இருக்கும் அது.

சிக்கன் மசாலா அல்லது மட்டன் மசாலா போட்டு வைக்கச் சொல்வேன். “சிக்கனுன்னு சொல்லிக் குடுத்தேன். டேஸ்ட்டா இருக்குன்னு பூராத்தையும் சாப்பிட்டுட்டான். அடுத்த வாரமும் குடுங்க. விட்டமின் டீ வேற இருக்கு. சப்வேல ட்யூனா சாண்ட்விச் வாங்கினாக்கூட சாப்பிடாத பய இதைச் சாப்பிட்டிட்டானே” என்பார்கள் பூரிப்பாக.

அதிலும் அந்த முண்ட கண் சூரையெல்லாம், பெயர்தான் அப்படி. சுவையில் வவ்வா மீனெல்லாம் பெட்டியைக் கட்டி விடும். கேரை, மத்தி என நூறு ரூபாய்க்கு கிடைப்பதை விட்டு விட்டு, ஆயிரம் ரூபாய்க்கு ஓடுகிறவர்களை நினைத்து கமுக்கமாகப் புன்னகைத்துக் கொள்வேன்.

ஆனால் என்னிடம் வந்து சொல்லுங்க எனக் கேட்டவர்களிடம் கேரையைச் சொல்லாமல் விட்டதில்லை.

“மேடம் சன்லைட்டுக்கு அப்புறமா மனுஷனால உருவாக்க முடியாத கேரையிலதான் விட்டமின் டி நிறைய இருக்கிறது” என்பேன். ஒருமுறை வாங்கிப் போனவர்கள் மறுமுறை வாங்காமல் இருந்ததில்லை.

மணிக்கு எழுபது கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தி இடம்பெயரும் விலங்கினமான அது, ஒருகுறிப்பிட்ட காலத்தில், தன்கூட்டத்தை திரட்டிக் கொண்டு, கடலின் மேல் மூச்சு வாங்க வரும் என எப்போதோ ஒரு கடலோடி சொன்னது நினைவிற்கு வருகிறது. கடலில் கண்கள் மிதக்குமாம் அப்போது. வாழ்நாளில் ஒருமுறையாவது அந்தக் காட்சியைக் கண்டு விட வேண்டும். ஆழமே கணக்கிட முடியாத ஆழ்கடலில் வசிக்கிற ஒரு கேரை மீனாகவே மாறத் துடிக்கிறது மனசு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Choose your Delivery Location
Enter your address and we will specify the offer for your area.
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare