
வஞ்சிர மீன்களை வளர்க்க முடியுமா?
வஞ்சிர மீன்களை வளர்க்க முடியுமா?
-சரவணன் சந்திரன்.
வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
ஒரு தகவல் வேண்டும். என் குழந்தைக்கு மூன்று வயது நிறைவடைந்துவிட்டது. வாரம் இருமுறை மீன் ஒருவேளை உணவாக வழங்கலாம் என்று எண்ணி உள்ளேன். நான் வசிப்பது கோவையில், எந்த மீன் சத்தும் சுவையும் நிரம்பியது. என்ன பருவத்தில் எதை வாங்குவது சரியாக இருக்கும். பெரிய அளவில் எனக்கு பொருளாதாரமும் இல்லை. உங்களுடைய கட்டுரை ஒன்றில் நீங்கள் மத்தி மீனை பரிந்துரைத்ததாக படித்த ஞாபகம் இருக்கிறது . (மீன்களை பதப்படுத்துவதற்காக ரசாயனங்கள் பயன்படுத்துவதாக வெளிவரும் தகவல்கள் உண்மையா?) இதை நீங்கள் உங்கள் முகநூல் பக்கத்தில் ஒரு கட்டுரையாக வேண்டுமானாலும் பதியலாம், நேரம் இருக்கும் போது தயவு செய்து பதில் கூறவும்.
நன்றி
மு.கதிர் முருகன்.
அன்புள்ள கதிர்,
தனிப்பட்ட முறையில் பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் “மூன்று வயது குழந்தைக்கு” என்ற வார்த்தை உறுத்தியது. மிகச் சரியாகச் சொல்லி விட வேண்டுமென்கிற பதைபதைப்பும் எழுந்தது. இதைப் பற்றி நீண்ட காலமாகவே எழுத வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் கண்ணாடி வீட்டினுள் இருந்து கல்லெறியக் கூடாது என்கிற பொறுப்புணர்வு தடுத்துக் கொண்டிருந்தது.
யாராவது ஒருத்தர் தான் சார்ந்த துறையொன்றினுள் நடக்கும் விஷயங்களை வெளிப்படையாகப் பேச முன் வர வேண்டும்தானே? நீங்கள் சொல்வது போல இங்கே சில இடங்களில், பார்மாலின் மீனில் கலக்கப்படுவது உண்மைதான். இங்கே என்ன நடக்கிறது என்பதைப் பரந்து விரிந்த தளத்தில் சொன்னால்தான் புரியும்.
தமிழகக் கடலுணவு பழக்கம் குறித்த அடிப்படையில் இருந்து அதைத் துவங்க வேண்டும். தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களில் கடலுணவு பழக்கம் தவிர்க்கவியலாதது. அப்படியே கொஞ்சம் முன்னேறி வந்தால் விருதுநகரில் கடலுணவு பழக்கம் வேறுமாதிரியாக இருக்கும். தமிழகத்தின் உள் மற்றும் மேற்கு மாவட்டங்களை, குறிப்பாக இப்போது நீங்கள் வசிக்கும் கோவை உட்பட, மிகச் சரியான கடலுணவு எப்போதுமே எட்டியதில்லை. இப்போது கொஞ்சம் பரவாயில்லை. கடற்கரையிலிருந்து தள்ளி இருப்பவர்கள் ஆறுகள் மற்றும் கண்மாயில் இருந்து வரும் நன்னீர் மீன்களை உண்டு பழகியவர்கள்.
இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள், விரால், ஜிலேபிக் கெண்டை, அயிரை என்று சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களிடம் போய் கருப்பு வவ்வால் என்றால் புரியாது. ஒட்டுமொத்த தமிழகமுமே கடலுணவை ஒருகாலம் வரை ரெண்டாம் பட்சமாகத்தான் வைத்து அணுகியிருக்கிறது.
இங்கே வாழ்ந்தாலும் மட்டன், தாழ்ந்தாலும் மட்டன். இப்போது இது போன்ற சிகப்பு இறைச்சிகளுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது. மருத்துவர்கள் மீன் சாப்பிடச் சொல்லி அதிகாரப்பூர்வமாக வலியுறுத்துகிறார்கள். இப்போதெல்லாம் ஒமேகா 3 என்கிற வார்த்தை சமூகத்தில் சகஜமாகப் புழங்குகிறது. கடலுணவுத் திருவிழாக்களை நட்சத்திர விடுதிகள் நடத்தத் துவங்கியிருக்கின்றன.
இந்தப் பின்னணியில்தான் மிக முக்கியமான விஷயமொன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது. உங்கள் கடிதத்தில் இருந்து படிப்படியாக ஒவ்வொன்றையும் விளக்குகிறேன். ஆடு மாடு கோழி இவை எல்லாவற்றையும் கேடு விளைவிக்கும் ரசாயனங்களைக் கொடுத்து எப்போதோ வளர்க்கத் துவங்கி விட்டோம்.
மனிதர்கள் கைப்படாமல் மிச்சம் விட்டு வைத்திருப்பது கடலை மட்டுமே. இப்போது அங்கேயும்கூட இறால், அசல் கொடுவா போன்றவற்றை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் வஞ்சிரத்தை வளர்க்க முடியாது இல்லையா? அதனால் கடலுணவு எப்போதுமே ரசாயனங்களில் இருந்து விலகியிருப்பது.
ஆகவே ஒமேகா 3, விட்டமின் டி போன்ற சத்துக்களைத் தரும் கடலுணவை எடுத்துக் கொள்வது நல்லது.
குறிப்பாய் மத்தி, காளா, சூரை என்ற டியூனா போன்ற மீன்களைக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். பால்சுறா, காரப்பொடி, குதிப்பு போன்ற மீன் வகைகளையும் நண்டு சதை போன்றவற்றையும் கொடுக்கலாம். எல்லா பருவங்களிலும் இப்போதெல்லாம் எல்லா மீன்களும் ஓரளவிற்குக் கிடைத்து விடுகின்றன.
இங்கேதான் இந்தத் துறை செயல்படும் விதம் குறித்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. தமிழகக் கடற்கரையோர மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு எல்லாவிதமான மீன்களும் விலை கொஞ்சம் கூடினாலும் கிடைத்து விடும். ஆறுகள், கண்மாய்கள் அருகி விட்டதால், கடற்கரை மாவட்டம் அல்லாத மக்கள் இன்று கட்லா, ரோகு, திலேப்பியா போன்ற வளர்ப்பு மீன்களை அதிகமாக உண்டு கொண்டிருக்கின்றனர்.
பொள்ளாச்சியில் ஒரு மீன் உணவகத்தில் கொடுவா என்று சொல்லி கட்லாவை கொண்டு வந்து வைத்தார்கள். தொண்டிக்குப் பக்கத்தில் இப்போது ஒரு படி அயிரை மீனின் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல். திடீரென கடலுணவின் பக்கமாய் ஒட்டுமொத்த பார்வையும் குவிந்ததால் இங்கே ஒரு மிகப் பெரிய சந்தையொன்று உருவாகி இருக்கிறது. தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகம் என்ற அரசு சார்ந்த அமைப்பு இந்த ஒட்டுமொத்த மீன் பிடியையும் கட்டுப்படுத்துகிறது.
இந்தியாவில் மும்பைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மீன் சந்தை சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கிறது. வெளிநாட்டு ஏற்றுமதியும் பெருகியிருக்கிறது. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து சகல நாடுகளுக்கும் மீன்கள் போகின்றன.
பெரும்பான்மை தமிழர்கள் அப்படியான மீன்களைப் பார்த்துக்கூட இருக்கமாட்டார்கள். இரண்டு கிலோ ஸைஸில் பச்சை நண்டு இருக்கிறது. ஒரு டைகர் எறாலின் எடையே 400 கிராம் இருக்கும். இதே மாதிரி லாப்ஸ்டர், வெள்ளை வவ்வால் எனப் பல ஏற்றுமதி ரகங்கள் இருக்கின்றன. ஆயிரம் ரூபாயில் துவங்கி பத்தாயிரம் ரூபாய் வரை விலை போகின்ற மீன்களும் இருக்கின்றன.
பெரும்பாலும் இவை பொது வணிகத்திற்கு கரைக்கு வருவதில்லை. எங்களைப் போன்ற கடைகள் அதற்கான கஸ்டமர்களிடம் கடை விரிக்கிறோம். மற்றபடி கடற்கரையோர மக்களைத் தவிர வேறு யாரும் இவற்றை அறிவதில்லை இப்போது கடற்கரை மக்களே காசு போய் விடும் என்பதற்காக ஒரு சிங்கி எறாலைக்கூட எடுத்துச் சாப்பிடுவதில்லை என மீனவ நண்பர் ஒருத்தர் குறைபட்டுக் கொண்டார்.
ஏனெனில் இங்கே சப்ளை என்பது குறைவாக இருக்கிறது. மீன் பிடி துயரங்களைப் பற்றியெல்லாம் நிறைய இடங்களில் எழுதியிருக்கிறேன். எனவே இந்த இடத்தில் நுகர்வோர் பார்வையில் இருந்து மட்டுமே விளக்குகிறேன். தமிழகக் கடற்கரையோரத்தில் பிடிபடும் கடலுணவு மட்டுமே நம்முடைய தட்டிற்கு வருகிறது என்பது நம்முடைய சுகமான கற்பனை. காசி மேட்டில் கேரள வண்டிகள் நிற்கும். ஒடிசா கடற்கரையில் தமிழக வண்டிகள் நிற்கும். இது இந்தியளவிலான சர்வதேச வணிகம்.
விலைகூடிய சரக்குகள் எல்லாமும் ஏற்றுமதி ஆகின்றன. தமிழகத்தை கடலுணவு, வளர்ப்பு மீன்கள் என இரண்டு விதமான பழக்கம் பிரிக்கிறது. இறால், விரால், திலேப்பியா, கட்லா, ரோகு போன்றவை வளர்க்கப்படுகின்றன. இவை முழுக்கவே உள்நாட்டு நுகர்விற்காகத் தயாரகுபவை. கடலுணவை பொறுத்தவரை, வாகன வசதிகள் பெருகி விட்டதால் இப்போது கடற்கரை இல்லாத நகரங்களுக்குள்ளும் நுழைகின்றன. ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கடற்கரை பிரதேசத்தில் இல்லாமல் இருந்தால், உங்களால் ஒருபோதும் அன்று பிடித்த மீனை உண்ணவே முடியாது.
மீன்பிடி படகுகளிலேயே நொறுக்கப்பட்ட ஐஸை எடுத்துக் கொண்டுதான் தொழிலுக்கே போகின்றனர். இரண்டு நாளில், ஐந்து நாளில், பதினைந்து நாளில், ஒரு மாதத்திற்கு மேல் கடலுக்குள் தொழில் பார்க்கப் போய்த் திரும்பி வருகிறவர்கள் இருக்கிறார்கள். அது கரைக்கு வரும் போது எட்டாவது நாள் மீன் அல்லது பதினாறாவது நாள் மீன். ஆனால் தரமான ஐஸில் இருப்பதால் அவை தகுதியான மீன்களும்.
கரைக்கு வந்த பிறகு அவை ஏலச் சந்தையில் கடை பரப்பப்படுகின்றன.
மீன் விலையும் தங்கத்தின் விலையைப் போலத்தான் இப்போதெல்லாம்.
அன்றன்றைக்கு ஏறி இறங்கும் விலை. கேரளாவில் தடை என்றால் இங்கிருந்து அங்கே போகும். இங்கே தடையென்றால் மும்பையிலிருந்து இங்கே வரும். எப்போதும் தட்டுப்பாடு நிறைந்த துறை இது என்பதால் இங்கும்கூட சின்ன அளவில் பதுக்கல்கள் இருக்கும். விலை போகாவிட்டால் படகில் இருந்தே மீனை இறக்காத நிலையும் உண்டு. ஆனால் பரபரப்பான இத்துறையில் அப்படி எப்போதாவதுதான் நடப்பதுண்டு.
எதற்காக இதை விளக்கிச் சொல்கிறேன் என்றால், என்னுடய வீட்டிற்குக் கூடையில் எடுத்துக் கொண்டு வரும் மீன் எனக்கு எதிரே இருக்கிற கடலில் இருந்து பிடித்தது என நான் நினைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக. சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்து நொச்சிக் குப்பம் கடற்கரையில் போட்டு மண் தூவி, இப்பப் பிடிச்சது என்பார்கள்.
இப்படித்தான் ஒரு இலை மறைகாய் வணிகம் இங்கே நடந்து கொண்டிருக்கிறது. எல்லா தொழிலையும் போலவே இந்தத் தொழிலிலும் இப்போது சீரழிவு எட்டிப் பார்த்திருக்கிறது. கலப்படம் என்கிற விஷயத்தில் இந்திய உணவுத் துறை முற்றிலும் சீரழிந்து விட்டது. எதில் கலப்படம் இல்லை என்று சொல்லுங்கள்? இந்தியாவே மிகப் பெரிய கலப்படக் குப்பைத் தொட்டிதான். சில நாடுகளில் உணவில் கலப்படம் செய்பவர்களுக்குத் தூக்குத் தண்டனைகூட தருகிறார்கள்.
கடலுணவு என்று வருகையில் இவற்றில் கலப்படம் என்பது பெரியளவிற்கு இருப்பதில்லை. இன்னொரு மீனின் பெயரைச் சொல்லி இன்னொன்றை விற்பார்கள். வளர்ப்பு இறாலை கடல் இறால் என நம்பித்தான் இப்போதும் மக்கள் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். கட்லா கடலில் நீந்தும் என நினைக்கிறவர்களும் இருக்கிறார்கள்.
மக்களைச் சொல்லித் தவறில்லை.
வெள்ளாட்டு வாலா எனப் பார்க்கப் பழகியவர்களுக்குக் கடலுணவை பரிசோதிக்கத் தெரியாது. இப்போதுதான் கடலுணவு பக்கமே நெருங்கி வந்திருக்கிறார்கள். எனவேதான் கடலுணவின் தரம் என்று வருகையில், மக்களிடம் குழப்பம் எஞ்சுகிறது. இங்கே கொஞ்சம் பரவலாக, விலை குறைந்த டி. சி. இறால்களை வாங்கி வந்து கெட்ட வாடை போவதற்கு ஒரு கெமிக்கலையும் வெள்ளையாய்ச் சதை மாறுவதற்கு ஒரு கெமிக்கலையும் போட்டு அலசுவது உண்டு.
அதேபோல் நாள்பட்ட மீன்கள் பளபளப்பாகத் தெரிய பார்மாலினை தெளிப்பதும் உண்டு. கேன்சரை உண்டு பண்ணுகிற கெமிக்கல்கள் அவை என்பது எல்லோருக்குமே தெரியும். அந்த மீன் எங்கே போகும் என யாராலும் உத்தரவாதம் கொடுக்க முடியாது. அதே சமயம் எல்லோரும் இதைச் செய்கிறார்கள் என்றும் சொல்லி விட முடியாது. கூடவே கரைக்கு வந்த பிறகு மீனவனுக்கு மீன் சொந்தமில்லை என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். அப்படியான இடங்களில் மீன் எடுப்பதை விவரமான வியாபாரிகள் எப்போதும் தவிர்த்து விடுவார்கள்.
விலை குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காகக் கண்ட இடத்தில் வாய் வைக்கத் துணியாதவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?
இதைக் கட்டுப்படுத்த வேண்டிய அரசுத் துறை வழக்கம் போல வேறொரு கவனத்தில் இருக்கிறது. தமிழக அரசின் மீன் வளத்துறை சார்பாக நடத்தப்படும் கடைகளில் விற்கப்படும் மீன்களை அவர்கள் சோதனைக்கு அனுப்பத் தயாரா? என மீன்வளத் துறையில் இருக்கும் நேர்மையான அதிகாரி ஒருத்தர் உள்ளிருந்தபடியே மனம் கசிந்து கேள்வி எழுப்பினார் என்னிடம்.
நுகர்வோர் தரப்பில் இன்னொரு கோணத்தைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இங்கே தமிழகத்தில் பேரம் என்பதே மிக மோசமான வடிவத்தில் உபயோகிக்கப்படுவது. ஐஞ்சு ரூபாய்க்கு தருவீயா என்பார்கள். அது வயிற்றிற்கு உகந்த தரமானதா என்பதைப் பார்க்காத மனோபாவம். காசைவிட வயிறு இரண்டாம் பட்சம்தானா?
ஒரு ரூபாய்க்கும் அரிசி இருக்கிறது. நூறு ரூபாய்க்கும் இருக்கிறது. தரத்தை விலை தீர்மானிக்காதுதான்.
ஆனால் முற்றிலும் கண்கெட்டு வித்தையைப் போல நிகழும் உணவு வணிகத்தில் விலைக்கு முக்கியமான பங்கிருக்கிறது. கடலுணவு துறையும் அதற்கு விதிவிலக்கில்லை. தரம் குறித்து தமிழக நுகர்வோர்கள் அடிப்படைக் கேள்வியை எழுப்ப வேண்டிய மனோபாவத்திற்கு முதலில் நகர வேண்டும். கடலுணவு தொழிலில் இப்போது கிடைத்திருக்கும் விழிப்புணர்வு வழியாக பொதுச் சமூகம் கடலை கொஞ்சம் நெருங்கிப் போய்ப் பார்த்து விசாரித்தால் முறையான தெளிவுகள் கிடைக்கக்கூடும். இன்னமும் முற்றிலும் தமிழக வணிகம் சீரழிந்து விடவில்லை.
தரமானவைகளும் இங்கே கொட்டித்தான் கிடக்கின்றன. நுகர்வோர் விழிப்புணர்வு என்பதே இப்போதைய உடனடித் தேவை. கடை வணிகம் என்பதையெல்லாம் தாண்டி தரமான மீனை நான் அதன் கண்ணைப் பார்த்தே வாங்குகிறேன். நாள்பட்ட மீன்களின் கண்களில் மஞ்சள் படலம் உருவாகத் துவங்கும்.
உயிர்ப்பான கண்களோடே நான் வணிகமும் செய்கிறேன். தவிர, நான் உண்ணும் உணவு குறித்த தெளிவை நோக்கி நகரவே நான் எப்போதும் விரும்புகிறேன். ஏனெனில் என் உணவு, என் உரிமை. அது உங்களுடையதும்தான். உங்களது குழந்தைக்குச் சிறந்ததை தேடிப் பிடித்துத் தேர்ந்தெடுக்கும் நிலையில்தான் நாம் புழங்கும் வெளியை வைத்திருக்கிறோம். அதற்காக யார் வெட்கப்படுவது?
One thought on “வஞ்சிர மீன்களை வளர்க்க முடியுமா?”
Gives good information. Thanks